நெல்லை, தென்காசி நில அதிர்வுக்கு முன் பல சம்பவங்கள் | Earthquake | Tenkasi, Tirunelveli
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மலையடிவாரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று காலை ஏற்பட்ட நில அதிர்வு மக்களை பீதியில் மூழ்கடித்தது. அம்பை, கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், விகே புரம், சிவந்திபுரம், ஆழ்வார்குறிச்சி, கடையம், மேட்டூர், ரகுமானியாபுரம், பெத்தநாடார்பட்டி, பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. காலை 11:45 முதல் 11:50 மணி இடையே 5 முதல் 15 வினாடி வரை தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் ராட்சத பாறைகள் உருண்டு செல்வதை போன்ற அதிர்வையும் சத்தத்தையும் மக்கள் உணர்ந்தனர். சில இடங்களில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், பொருட்கள் உருண்டு விழுந்தன. கதவு, ஜன்னல், ஆஸ்பெஸ்டாஸ் சீட், தகர செட்கள் குலுங்கின. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த நில அதிர்வால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பை அருகே உள்ள அடையகருங்குளம் என்ற ஊரில் கங்காதரன் என்பவர் வீட்டில் நிலஅதிர்வால் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இது பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.