டென்னிஸ் வீராங்கனை ராதிகாவை சுட்டது ஏன்? தந்தை பகீர் வாக்குமூலம் Tennis Player Radhika Yadav
டில்லி அருகே குருகிராம் நகரில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் அவர் வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றது அவரது சொந்த தந்தை என்பதால் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குருகிராம் நகரில் 57 வது செக்டாரில் வசித்து வருபவர் யாதவ். இவரது மகள் ராதிகா யாதவ். மாநில அளவில் பிரபல டென்னிஸ் வீராங்கனை. மாநில, தேசிய அளவில் விளையாடி பல பட்டங்களை வென்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பிலும் ராதிகா விளையாடியுள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ITF தரவரிசையில் ராதிகா யாதவ் 113வது ரேங்க்கில் இருந்தார். இன்று காலை 10:30 மணியளவில் வீட்டின் மாடியில் ராதிகாவுக்கும், அவர் அப்பாவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்பா சொன்ன அறிவுரைகளை ராதிகா கேட்கவில்லை. ராதிகாவை அப்பா திட்டியுள்ளார். என் விஷயத்துக்குள்ள வராதீங்க என பதிலுக்கு ராதிகாவும் ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கைத்துப்பாக்கியை எடுத்து வந்து, ராதிகாவை சுட்டுள்ளார். 5 முறை அவர் சுட்டார். 2 முறை குறி தவறியது. நெஞ்சு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்தன. ரத்தவெள்ளத்தில் ராதிகா சரிந்ததும், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கோபத்தில் அறிவிழந்து செய்து விட்டோமோ? என யாதவும் உறைந்து போய் நின்றார். உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு ராதிகாவை குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். சம்பவம் பற்றி டாக்டர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ராதிகாவின் தந்தை யாதவிடம் விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ராதிகா, இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவர் போடும் ரீல்ஸ்கள் அப்பா யாதவுக்கு பிடிக்கவில்லை. ஏன் இப்படியெல்லாம் வீடியோ போடுகிறாய்? மானம் போகிறது என கூறியுள்ளார். ராதிகா அதை பொருட்படுத்தவில்லை. சமீபத்தில் ராதிகா போட்ட ஒரு ரீல்ஸ் வீிடியோ அப்பா யாதவை ரொம்பவே கோபப்படுத்தி உள்ளது. அதுபற்றி கேட்டபோதுதான், ராதிகா பதிலுக்கு கோபம் காட்டியுள்ளார். என் விஷயத்தில் தலையிடாதீங்க என அப்பாவை திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் மகள் ராதிகாவை அப்பா யாதவ் சுட்டுக் கொன்றுள்ளார் என போலீஸ் விசரணையில் தெரிய வந்தது. ராதிகா, சொந்தமாக டென்னிஸ் அகாடமி துவங்கியதும் அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. அது தொடர்பாகவும் இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்ததாக, போலீசார் கூறினர். யாதவ் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தார். அதில்தான் சுட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த ராதிகாவின் குடும்ப உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணையில் அப்பா யாதவ்தான் சுட்டார் என்பது உறுதியாகியானது. அதைத் தொடர்ந்து, ராதிகாவின் தந்தை யாதவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.