ஷினாவத்ரா பதவி நீக்கம்: தாய்லந்தில் குழப்பம் Thailand Constitutional Court
தாய்லாந்தில் மூவ் பார்வர்டு கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ராPaetongtarn Shinawatra பதவி வகித்து வந்தார். தாய்லாந்துக்கும் கம்போடிய நாட்டுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்னை குறித்து தாய்லாந்து பிரதமர் ஷினாவத்ரா, கம்போடிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஹூன் சென்னுடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஆன் லைனில் கசிந்தது. அந்த உரையாடலில் ஹூன் சென்-ஐ மாமா என ஷினாவத்ரா அழைத்தார். தாய்லாந்து நாட்டின் ராணுவ தளபதி ஒருவரின் பெயரைச்சொல்லி, அவர் தனது எதிரி என கூறினார். இது தாய்லாந்து ராணுவத்தை கோபமூட்டியது. இந்த தொலைபேசி உரையாடல் ஷினாவத்ராவுக்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடிகளைக் கொடுத்தன. அவரது பேச்சுகளுக்கு தாய்லாந்து எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி தாய்லாந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஜூலை மாதம் அவரை பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. துணை பிரதமர் சூரிய ஜூவாங்ரூங்ரு வாங்கிட் நாட்டின் நிர்வாக பொறுப்பை தற்காலிகமாக ஏற்று நடத்தி வந்தார். இந்நிலையில் தாய்லாந்து சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அவரை நிரந்தரமாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கி இன்று உத்தரவிட்டது. ஷினாவத்ராவின் செயல்கள் நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டன. தேசிய நலனைக் காட்டிலும் தனிப்பட்ட நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமைந்துவிட்டது. அவர் மீது கம்போடிய மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டது. அவர் அரசியல் நெறிமுறையைப் பின்பற்றவில்லை. கடந்த ஜூலை 1ல் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அவரது பிரதமர் பதவி முடிவடைந்து விட்டது. அவர் பிரதமர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 2008ம் ஆண்டுக்குப் பிறகு தாய்லாந்து நாட்டு நீதிபதிகளால் பதவி நீக்கம் செய்யப்படும் 5வது பிரதமர் ஷினாவத்ரா ஆவார். ஷினாவத்ரா பதவிநீக்கத்தால் தாய்லாந்து நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.