பணத்துடன் எஸ்கேப் ஆக முயன்றவர்கள் சிக்கியது எப்படி?
கேரளா மாநிலம் திருச்சூரில் 3 வங்கி ஏடிஎம்களில் வட மாநில கொள்ளை கும்பல் நேற்றிரவு கொள்ளையடித்தனர். கொள்ளையடித்த பணம், அவர்கள் பயன்படுத்திய காரை ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் ஏற்றி தப்ப முயன்றனர். லாரியை கேரளா போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களிடம் தப்பிய கன்டெய்னர் லாரி தமிழகத்துக்குள் நுழைந்துள்ளது. இது பற்றி தமிழக போலீசுக்கு கேரளா போலீஸ் அலர்ட் செய்தது. கொள்ளையர்களின் லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக செல்வதை அறிந்து, நாமக்கல் போலீசார் பிடிக்க முயன்றனர். அந்த லாரி நிற்காமல், சாலையில் சென்ற மற்ற வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டி சென்றனர். தாறுமாறாக ஓடிய லாரி, வழியில் இருந்த வாகனங்களை மோதியபடி சென்றது. பொதுமக்கள் சிலர் லாரியை நிறுத்த முன் கண்ணாடிகள் மீது கற்களை வீசி தாக்கினர். அப்போது லாரி நிற்காமல் ஓடியது. இதனால், கூடுதல் போலீசார் படை ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டு சேஸிங் நடந்தது. சேலம், சங்ககிரி அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர். அங்கு திரண்ட பொதுமக்கள் லாரி டிரைவரை பிடித்து கீழே தள்ளி தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர். கண்டெய்னருக்குள் மேலும் சில கொள்ளையர்கள் இருப்பதை அறிந்த போலீசார் லாரியை சுற்றிவளைத்தனர். கன்டெய்னரை திறந்தபோது, உள்ளே இருந்த கொள்ளையர்கள் போலீசாரை கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கொள்ளையன் இறந்தான். இன்னொருவன் காலில் குண்டுபாய்ந்து கீழே விழுந்தான். ஒருவன் தப்பி காட்டுக்குள் ஓடிவிட்டான். கன்டெய்னரில் இருந்த மேலும் 3 பேர் சிக்கினர். மொத்தம் 7 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கன்டெய்னர் லாரியில் இருந்த 66 லட்சம் ரூபாய், கொள்ளைக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.