தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு விதித்த தடை நீக்கம்
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், பராக்கிரம பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின் இக்கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் 7 ம் தேதி நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன. முன்னதாக, கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணியில் கோயில் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. சில தினங்களுக்கு முன்பு, இந்துசமய அறநிலைய அதிகாரிகள் தென்காசி கோயிலில் ஆய்வு செய்தனர். வரவு செலவு கணக்கு சரிபார்த்ததில் கோயில் பணத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயில் செயல் அலுவலர் முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இச்சூழலில், கோயில் பணத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவும், கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது. கோயிலில் நடந்த புனரமைப்பு பணிகளை ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் வாதிடும்போது, யாகசாலை பூஜைகள் தொடங்கி விட்டன. இந்த சமயத்தில் கும்பாபிஷே கத்தை தடை செய்வது சரியாக இருக்காது; கும்பாபிஷேக பணிகள் முடிந்து விட்டதால் கும்பாபிஷேகத்தை நிறுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை என வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு விதித்த இடைக்கால தடையை நீக்கினர். இந்த உத்தரவையடுத்து, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.