உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஜித் மீது புகார் தந்த நிகிதாவின் பின்னணி அம்பலம் | Thirubuvanam | Thirubuvanam Case

அஜித் மீது புகார் தந்த நிகிதாவின் பின்னணி அம்பலம் | Thirubuvanam | Thirubuvanam Case

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்டார். இவர் மீது நிகிதா என்ற டாக்டர் கொடுத்த திருட்டு புகாரின் பேரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 5 தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்டது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை அடுக்கடுக்காக அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பி உள்ளது. 9 சவரன் நகை காணவில்லை என டாக்டர் நிகிதா புகார் அளித்திருக்கும் நிலையில் அதன் உண்மைதன்மை குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இறந்த அஜித்குமார் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினர் சொல்கின்றனர். புகார் அளித்த டாக்டர் நிகிதா, அவரது தாய் சிவகாமி இப்போது தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், அஜித்குமாருடனான தனிப்பட்ட மோதலில் அவர் மீது திருட்டு பட்டம் சுமத்த சதி நடந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்த ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் நிலையில் அஜித்குமார் மீது புகார் கொடுத்த டாக்டர் நிகிதா ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது. 2010ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என கூறி 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். அரசு வேலை வாங்கி தருகிறோம் என உறுதியளித்துவிட்டு வேலை வாங்கி தரவில்லையாம். இதில் பாதிக்கப்பட்ட ராஜாங்கம் என்பவர் பணத்தை திருப்பி கேட்ட போது கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர் தரப்பில் 2011ல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது டாக்டர் நிகிதாவும், அவரது தாய் சிவகாமியும் தலைமறைவாக இருந்துள்ளனர். இது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு நிகிதா பெயர் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோசடி பின்னணி கொண்டவரின் புகார் அடிப்படையில் அஜித்குமார் விசாரணையில் அடித்து கொல்லப்பட்டது அம்பலமாகி இருக்கிறது. இதுவரை காணாமல் போனதாக கூறப்படும் 9 சவரன் நகை எங்கும் கைப்பற்றப்படவில்லை. ஒரு சந்தேக வழக்குக்காக போலீஸ் இவ்வளவு தீவிரம் காட்டியது ஏன் என்கிற மர்மம் நீடிக்கிறது. விரைவில் டாக்டர் நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமியிடம் போலீஸ் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ