திருச்செந்தூர் கோயில் நிதி: அம்பலப்படுத்திய RTI ரிப்போர்ட் | Thiruchendur | HRCE
ச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 6 நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு விரதம் முடிப்பார்கள். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. சட்டசபையில் 2021-22 ஆம் ஆண்டு அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் கோயிலில் 150 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கோயிலில் திருப்பணிகளுடன் சேர்த்து இதர பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கோயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள HCL நிறுவனத்தின் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் 200 கோடி வழங்கியது. இதனுடன் கோயில் நிதி 100 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டு 300 கோடியில் மாஸ்டர் பிளான் திட்டம் போடப்பட்டது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை கட்ட திட்டமிடப்பட்டது. இதனுடன் தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோயில் நிதி 100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. திருச்செந்தூர் கோயில் திருப்பணிகளை 2022 செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் புதிதாகக் கட்டப்பட்ட கழிவறைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் அவை பக்தர்கள் பயன்படுத்தும் தரத்தில் இல்லை என அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தது. புதிதாக கட்டப்பட்ட வெஸ்டர்ன் கழிவறையில் மேலே வைக்கும் டேங்க் இல்லை. கழிவறையில் பல பொருட்கள் காணாமல் போகியுள்ளது. தரமாக கட்டவில்லை என பாஜ நிர்வாகி வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இதனால் திருச்செந்தூர் கோயிலில் 300 கோடியில் நடக்கும் பெருவளாக திட்ட பணிகள் முறையாக நடக்கிறதா என்கிற சந்தேகம் எழுந்தது. வக்கீல் ராமநாத ஆதித்தன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோயில் கட்டுமான பணிகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில் சென்னையை சேர்ந்த நிறுவனத்துக்கு கோயில் திட்ட பணிகள் குறித்த வரைபடம் தயாரிக்க மட்டுமே 8 கோடி ரூபாய் தரப்பட்டது தெரியவந்துள்ளது.