அஜித்குமார் லாக்அப் டெத்: நிகிதா கல்லூரிக்கு ரிட்டன் | thirupuvanam ajith kumar case | Nihitha video
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார், போலீஸ் கஸ்டடியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டது. திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் கொடுத்த நகை திருட்டு புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரித்த க்ரைம் டீம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து துன்புறுத்தி கொன்றனர். லாக்அப் டெத்துக்கு காரணமாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். புகார் கொடுத்த நிகிதா மீதும் திடுக்கிடும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதாவது, டில்லியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் உதவியை நிகிதா நாடினார். அந்த அதிகாரி தமிழக தலைமை செயலாளர் ஒருவருக்கு தகவல் சொன்னார். அவர் மூலம் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேலிட அழுத்தம் காரணமாக போலீசார் அரக்கத்தனமாக நடந்து இருக்கின்றனர். இப்படிதான் அஜித் குமார் லாக்அப்டெத் நடந்தது என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. இன்னொரு பக்கம் நிகிதா மீது பலரும் பண மோசடி புகார் கூறினர். ஏற்கனவே அவர் மீது வழக்கு இருப்பதாகவும் தகவல் வெளியானது. அரசியல் கட்சி தலைவர் திருமாறன், நிகிதா மீது திருமண மோசடி புகார் கூறினார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றி பணம் பறித்ததாக திடுக்கிட வைத்தார். அவர் வேலை பார்க்கும் கல்லூரியில் படித்த மாணவிகளும் நிகிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். சோசியல் மீடியாவிலும் நிகிதாவை பலரும் வசைபாடினர். இப்படி நிகிதா மீது குற்றச்சாட்டுகள் குவிந்ததால், அஜித் குமார் லாக்அப்டெத் விவகாரத்தில் நிகிதாவின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்ற அழுத்தம் உண்டானது. இதனால் நிகிதாவும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. பரபரப்பான சூழலில் தனது அம்மாவுடன் நிகிதா கோவை தப்பி செல்வதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. பொள்ளாச்சி அருகே ஒரு ஓட்டலில் அவரை 2 மணி நேரம் மடக்கி வைத்திருந்ததாகவும், கன்ட்ரோல் ரூமில் இருந்த போலீசார் அவரை விட சொல்லி விட்டார் என்றும் ஒருவர் பேசும் ஆடியோ மற்றும் ஓட்டலில் நிகிதா இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் தான் நிகிதா பேட்டி ஒன்று அளித்தார். தன் மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார். அஜித் குமார் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டதும் இதயமே நொறுங்கி விட்டதாகவும், தான் கதறி அழுததாகவும் நிகிதா சொன்னார். சம்பவம் நடந்த பிறகு வேலைக்கு செல்லாமல் இருந்த நிகிதா, இப்போது மீண்டும் பணிக்கு திரும்பி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லில் உள்ள எம்விஎம் அரசு கல்லூரியில் தான் அவர் பேராசிரியையாக வேலை பார்க்கிறார். தாவரவியல் துறை தலைவராகவும் உள்ளார். இன்று காலையில் வழக்கம் போல் அவர் கல்லூரி சென்றார். மாணவிகளுக்கு வகுப்ப எடுத்தார். கல்லூரிக்கு வராதா நாட்களுக்கு அவர் மெடிக்கல் லீவு எடுத்ததாகவும் தகவல் வெளியானது.