இந்தியாவுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்: பிரிட்டன் புகழாரம்|Thiruvananthapuram|F-35 fighter jet
பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் HMS பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அதில் இருந்து ஜூன் 14ல் புறப்பட்ட F35B போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை பிரச்னையை எதிர்கொண்டது. இதையடுத்து பைலட் அவசர உதவி கேட்டதால் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இறங்க அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசு உத்தரவுபடி விமானத்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. ஆனாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தால் பறக்க முடியவில்லை. பழுது நீக்கும் முயற்சியில் பிரிட்டன் கடற்படை பொறியாளர்கள், விமானம் தயாரித்த நிறுவனத்தின் பொறியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. ஜூன் 14 முதல் இந்த விமானம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 640 கோடி மதிப்புடைய அதிநவீன போர்விமானம் இன்னொரு நாட்டில் இப்படி பழுதாகி நின்றதை பிரிட்டன் எதிர்காட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. இதையடுத்து விமானத்தின் பழுது சரி செய்வதற்காக, பிரிட்டீஷ் விமானப்படை பொறியாளர்கள் 24 பேர் கொண்ட குழு, திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள் ஒரு வாரம் போராடி, விமானத்தை பழுது நீக்கினர். தற்போது அந்த விமானம் பிரிட்டன் புறப்பட்டு சென்றது. இந்திய அதிகாரிகளின் அனைத்து ஆதரவிற்கும், நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என பிரிட்டன் பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.