திருப்பூரில் கார்-வேன் நேருக்கு நேர் மோதி கோர சம்பவம் | Tiruppur Madathukulam Accident | Tiruppur Tr
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் காரில் சென்றார். பின்னர் நள்ளிரவில் தியாகராஜன் குடும்பம் மீண்டும் பழநிக்கு புறப்பட்டது. அவர்களது கார் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கருப்பசாமிபுதூர் என்ற ஊர் அருகே வந்த போது கோர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த கேரள பதிவெண் கொண்ட சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதின. காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. உள்ளே இருந்த தியாகராஜன், அவரது மனைவி பிரீத்தி, மகன் ஜெயபிரியன், தியாகராஜனின் தாய் மனோன்மணி பரிதாபமாக இறந்தனர். கோர விபத்தில் வேன் முன் பகுதியும் சிதறியது. வேனில் இருந்த 23 பேரில் 14 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் திண்டுக்கல்-கோவை ரோட்டில் உள்ளது. அங்கு இப்போது 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில இடங்களில் ஒரே வழித்தடத்தில் வாகனங்கள் நேரும், எதிருமாக வர வேண்டி உள்ளது. தியாகராஜன் காரும் சுற்றுலா வேனும் அப்படி ஒரே ரோட்டில் எதிர் எதிர் திசையில் வந்த போது தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.