அடிவயிற்றில் வலிப்பதாக கதறிய சிறுமி: பள்ளியில் பகீர் | Tirupur school | POCSO act
கழிவறை சென்ற சிறுமியிடம் சீண்டல் திருப்பூர் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்! திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவறை சென்றுள்ளார். அப்போது கழிவறை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மாலை வீட்டுக்கு சென்ற அவர் தனது தாயிடம் அடி வயிற்றில் வலிப்பதாக கூறி உள்ளார். பள்ளியில் நடந்த சம்பவம் பற்றியும் சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் இன்று காலை தனியார் பள்ளியை முற்றுகையிட்டனர். சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் என்ற 27 வயது இளைஞரை கைது செய்தனர். திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.