கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்க திட்டம்! TNEB | Tariff Change | Bill Hike
ஜூலை 1 முதல் உயர்கிறது மின் கட்டணம்! தமிழகத்தில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், 2022 செப்டம்பர் 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தொடர்பான ஆணையில், அந்த நிதியாண்டு முதல் 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஆணையம் அனுமதி அளித்தது. இந்த கட்டணத்தை, 6 சதவீதம் அல்லது அந்த ஆண்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில், எது குறைவோ? அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்ப, இரு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண் 3.16 சதவீதமாக இருந்தது. எனவே வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்த ஆணையம் முடிவு செய்தது. மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து, எவ்வித ஆணையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. எனினும், ஆணையம், ஆணை வெளியிடும்போது, வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்கக்கூடாது, இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். எனவே, வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. இலவச சலுகைகள் தொடரும் என்று மின்துறை அமைச்சர் சிவசங்கர் மே 20ல் தெரிவித்தார். இதேபோல, தொழிற்சாலைகளுக்கான கட்டண உயர்வையும், அரசு ஏற்பதாக அறிவிக்க வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தினர். அதற்கு அரசு தரப்பில் பதில் இல்லை.