டீசல் நிரப்பிய பஸ்; நிர்வாகத்துக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு
திருநெல்வேலி, வஉசி நகரை சேர்ந்த வக்கீல் பிரம்மநாயகம், கடந்தாண்டு ஜூன் 4ம் தேதி மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். 153 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தார். அந்த பஸ் கோவில்பட்டி அரசு பணிமனைக்கு டீசல் நிரப்ப சென்றது. இதனால், சுமார் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. அத்துடன், பஸ்சில் பயணிகளை வைத்துக் கொண்டே டீசல் நிரப்பியது மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறி நுகர்வேர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வக்கீல் பிரம்மா வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் மனுவை விசாரித்து தீர்ப்பு அளித்தனர். பஸ்சில் பயணிகளை வைத்துக்கொண்டே டீசல் நிரப்பியது சேவை குறைபாடு என அறிவித்தனர். இதற்கு நஷ்ட ஈடாக, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவாக 10 ஆயிரம் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர். நஷ்ட ஈடு தொகையை, அரசு போக்குவரத்து கழக நாகர்கோயில் கிளை மேலாளர், பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் தங்கள் சொந்த பணத்தில் இருந்து 1 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளனர். நஷ்டஈடுக்கு அரசு நிதியை பயன்படுத்த கூடாது. 1 மாதத்திற்குள் நஷ்டஈடு தர தவறினால் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தொகையை வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.