தண்டவாளத்தை மாற்றும் இடத்தில் முக்கிய தடயங்கள் | Train Accident | Bagmati Express | Kavaraipettai
நேற்றிரவு மைசூரில் இருந்து வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே, நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயிலின் பெட்டி உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகளில் தீ பிடித்தது. எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 1,650 பயணிகள் இருந்துள்ளனர். உள்ளூர் மக்கள் முதல்கட்டமாக பயணிகளை மீட்க ஆரம்பித்தனர். ரயில்வே உயரதிகாரிகள், ஊழியர்கள், பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்பு பணியில் இணைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை ராட்சச கிரேன் மூலம் இன்று காலை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்தது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மைசூரில் இருந்து வந்த பாக்மதி ரயில் சென்னை பெரம்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டது. சரியாக 8.27 மணிக்கு பொன்னேரி ஸ்டேஷன் வந்து சேர்ந்தது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது. மெயின் லைன் வழியாக தான் ரயில் செல்ல வேண்டும். ரயில் செல்வதற்கு ஏற்ப, க்ரீன் சிக்னலும் கொடுக்கப்பட்டது.