விநாயகர் ஊர்வலத்தில் 9 உயிரை பறித்த கோரம் | truck crashes into ganesh procession | hassan accident
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மொசாலே ஹோசாஹள்ளி என்ற ஊரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. அந்த பகுதியில் உள்ள 4 வழிச்சாலை வழியாக ஊர்வலம் சென்றது. இதற்காக போக்குவரத்தில் போலீசார் மாற்றம் கொண்டு வந்திருந்தனர். 4 வழிச்சாலையின் ஒரு பக்கத்தில் ஊர்வலம் சென்றது. இன்னொரு பாதை டூ-வேயாக மாற்றப்பட்டு இருந்தது. ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலத்தில் மக்கள் பங்கேற்று இருந்தனர். 4 வழிச்சாலை பகுதியை 5 நிமிடத்தில் ஊர்வலம் கடக்க இருந்தது. அந்த நேரத்தில் தான் கோர விபத்து நடந்தது. டூ-வேயாக மாற்றப்பட்டு இருந்த பகுதியில் அசுர வேகத்தில் சென்ற சரக்கு லாரி, சென்டர் மீடியேனில் ஏறி ஊர்வலத்துக்குள் பாய்ந்தது. டிரைவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஊர்வலத்தில் வந்த அப்பாவி மக்கள் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிர் இழந்தனர். இன்னொருவர் மருத்துவமனையில் சகிச்சை பலனின்றி இறந்தார். இன்னும் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இறந்த 9 பேரில் பலரும் இளைஞர்கள். 3 பேர் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள். லாரியை ஓட்டி வந்த அதே ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.