அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியா சுளீர் பதில் Trump American president oil procurement Russia Ra
உக்ரைன் நாட்டுடன் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடுவிதித்தார். ரஷ்யா கேட்கவில்லை. இதனால், ரஷ்யாவுடன் வர்த்த தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு அபராத வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டினார். இந்தியாவுக்கு ஏற்கனவே 25 சதவீத கூடுதல் வரி விதித்துள்ள டிரம்ப், இந்த அபராத வரியும் சேர்த்து விதிக்கப்படும் என்றார். ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 35 சதவீத எண்ணெயை இந்தியா வாங்குகிறது. அமெரிக்காவின் மிரட்டலை அடுத்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதாக செய்திகள் வந்தன. இதை அதிபர் டிரம்பும் ஆமோதித்து பேசினார். இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என கேள்விப்பட்டேன். அது சரியா என எனக்கு தெரியாது. ஆனால், அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் என டிரம்பும் மகிழ்ச்சியுடன் கூறினார். இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்தர். இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தையில் எண்ணெய்க்கான விலையுடன், அந்த நேரத்தில் உலக அளவில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்து கொள்முதல் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு. முடிவுகளைப் பொறுத்தவரை அவை சந்தை நிலவரம் மற்றும் தேசிய நலன்களால் வழி நடத்தப்படுகின்றன. அமெரிக்காவுடன் இந்தியா பல சவால்களை சமாளித்து வந்திருக்கிறது. அந்த நாட்டு உடனான உறவை முன்னோக்கி எடுத்துச்செல்லவே இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளுக்குமான நல்லுறவு தொடர்ந்து முன்னேறும் என்றே நம்புகிறோம். பல்வேறு நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவு என்பது அந்தந்த நாடுகளின் தகுதிகளைக்கொண்டு முடிவு செய்யப்படுகிறதே தவிர, மூன்றாவது நாட்டின் தலையீட்டால் இல்லை என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இதன் மூலம் அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு இந்தியா பயப்படாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.