காசாவை விட்டு ஹமாஸ் வெளியேற எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! Trump | Hamas | Palestine | Gaza
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் நுழைந்து 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போர் மூண்டது. அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் முயற்சியால், இரு தரப்புக்கும் இடையே ஜனவரி 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் ஹமாஸ் 25 பிணைக்கைதிகள் மற்றும் எட்டு பேரின் உடல்களை ஒப்படைத்தது. பதிலுக்கு இஸ்ரேல் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. தற்போது ஹமாஸ் வசம் 24 பிணைக்கைதிகள் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அமெரிக்கர்களும் அடக்கம். மேலும் 34 பிணைக்கைதிகளின் உடல்களும் அவர்கள் வசம் உள்ளன. முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அமெரிக்கா 1997க்கு பின், முதன் முறையாக ஹமாஸ் தரப்புடன் நேரடியாக கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சு நடத்தியது. அதில் எஞ்சியுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை. பாதி பிணைக்கைதிகளை மட்டுமே விடுவிப்போம். எஞ்சியவர்களை நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் தான் விடுவிப்போம் என கூறியது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காசா மக்களுக்கு வழங்கி வந்த உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற பொருட்களை நிறுத்தியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும். பிறகு விடுவிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொடூர மனமுடையவர்கள் தான் பிணைக்கைதிகளின் உடல்களை கூட வைத்திருப்பர். ஹமாஸ் அத்தகையவர்கள் தான். நான் சொல்வது போல் நடக்கவில்லை என்றால், உங்கள் கதையை முடிக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேலுக்கு வழங்குவேன். பிறகு ஹமாஸ் அமைப்பில் ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள். இது உங்களுக்கான கடைசி எச்சரிக்கை. காசாவை விட்டு வெளியேறுங்கள். காசா மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பிணைக்கைதிகளை விடுவித்தால், உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. விடுவிக்கவில்லை என்றால் நீங்கள் அழிவீர்கள். பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும், என அதில் கூறப்பட்டுள்ளது.