சுற்றுலா சென்று அமெரிக்காவில் குழந்தை பெறுவதை தடுக்க டிரம்ப் முயற்சி | Trumps day 1 order
அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். அவர் எந்த மாகாணத்தில் பிறக்கிறாரோ அந்த மாகாண குடியுரிமையும் உண்டு. பெற்றோரின் குடியுரிமை அல்லது அவர்களின் குடியேற்ற நிலையை அது கருத்தில்கொள்ளாது. 1868 முதல் இந்த சட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்து இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பலர், தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரசவ காலத்தில் சுற்றுலா சென்று, அமெரிக்காவில் குழந்தை பெற்றெடுப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ளது. அதில் இந்தியர்கள், மெக்சிகோ போன்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என டிரம்ப் தேர்தல் நேரத்திலேயே பேசி வந்தார். அதிபராக பதவி ஏற்ற முதல் நாள் அவர் கையெழுத்திட்ட கோப்புகளில், பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவும் ஒன்று. அவருடைய இந்த முடிவு இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.