துருக்கி நிறுவனம் ஏர் இந்தியா விமானத்தை பராமரித்ததா? | Turkish Technic | Air India Crash
குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர், விமானம் விழுந்து நொறுங்கிய கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என 270 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டு, விபத்து குறித்த விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் துருக்கியை சேர்ந்த Turkish Technic என்ற நிறுவனம் தான் பெரும்பாலான ஏர் இந்தியா விமானங்களை பராமரிக்கிறது. விபத்துக்கு பின்னால் துருக்கியின் சதி இருக்கலாம் என்கிற யூகங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஏனென்றால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தின் போது பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவி செய்த நாடு துருக்கி. பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய பெரும்பாலான ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தியாவில் உள்ள ஒன்பது முக்கிய ஏர்போர்ட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட Celebi என்ற துருக்கி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னணியில் தான் தற்போது Turkish Technic நிறுவனத்தின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான பராமரிப்புக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என துருக்கி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு தகவல் தொடர்பு இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 வகை விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டது என வெளியான தகவல் உண்மையல்ல. ஏர் இந்தியா மற்றும் துருக்கி விமான தொழில்நுட்பக் குழுவின் இடையே 2024, 2025ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் கீழ் பி777 வகை விமானங்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் எங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. துருக்கி நிறுவனம் இன்றுவரை அத்தகைய ஏர் இந்தியா விமானங்களை பராமரிக்கவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி பராமரிப்பை எந்த நிறுவனம் செய்தது என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த விஷயத்தில் அவர்களைப் பற்றி அறிக்கையில் வெளியிட எங்களுக்கு எந்த தேவைகளும் இல்லை. ஒரு தவறானத் தகவலை மையமாக்கி, சர்வதேச அரங்கில் துருக்கியை பிரதிநிதித்துவப்படுத்துவது சரியல்ல. எங்களது நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.