திமுக அரசு மீது நம்பிக்கை இழந்த கிறிஸ்தவர்கள் | TVK | TVK Vijay | DMK
வன்னியர் சமுதாயத்தினர் எம்.பி.சி எனும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் கிறிஸ்தவ மதத்தை தழுவியர்கள் எம்.பி.சி பிரிவின் கீழ் வர மாட்டார்கள். சட்டரீதியாக அவர்களை எம்.பி.சி பட்டியலில் சேர்க்க முடியாது. இதன் காரணமாக இடஒதுக்கீடு உள்ளிட்ட பலன்களை அவர்களால் பெற முடியவில்லை. எனவே கிறிஸ்தவ வன்னியர்கள், தங்களையும் எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என 2021ம் ஆண்டு தேர்தலின்போது திமுக உறுதி அளித்தது. இதுவரை அக்கோரிக்கையை தி.மு.க அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. அதிருப்தி அடைந்த கிறிஸ்தவ வன்னியர்கள், திண்டுக்கல்லில் இடஒதுக்கீடு கோரிக்கையை மையப்படுத்தி மாநாடு நடத்தினர். அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஷப் தாமஸ் பால்சாமி பங்கேற்று பேசினார். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், யாருக்கு ஓட்டளிப்பது குறித்து, தமிழக ஆயர் பேரவை கூடி முடிவெடுக்கும் என்றார். தி.மு.க., அரசு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், விஜய் கட்சிக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை திசை மாற்றி விடுவோம் என இன்னொரு கத்தோலிக்க பாதிரியார் எச்சரித்தார். அவரது பேச்சுக்கு கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும், அதை வலியுறுத்தி ஆதரவு பிரசாரம் செய்யப்பட்டது. இதையடுத்து கத்தோலிக்க பாதிரியார் சிலர், தி.மு.க.,வுக்கு எதிராக செயல்படும் தகவல், முதல்வருக்கு தெரிய வந்தது. தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம், கிறிஸ்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க.,வில் உள்ள கிறிஸ்தவ நிர்வாகிகள், யு டியூப் நெறியாளர்கள் மூலம் சமூக வலைதளங்களில், விஜய்க்கு ஓட்டு போட வேண்டாம் என்ற தலைப்பில், எதிர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், 40 சதவீதம் ஓட்டுக்களை பெற வேண்டும். குறைந்தபட்சம், 35 சதவீதத்துக்கு மேல் எடுக்க வேண்டும். இந்த தேர்தலில் விஜய் கட்சியால், 40 சதவீதம் ஓட்டுக்களை வாங்க முடியாது. எனவே, அவர் உறுதியாக ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த யதார்த்தம் புரிந்து கொள்ளாமல், விஜய் கிறிஸ்துவர் எனக்கருதி, அவருக்கு ஓட்டு போட வேண்டாம். அது விஜய்க்கு போடுகிற ஓட்டு அல்ல; மறைமுகமாக பா.ஜ - அ.தி.மு.க., கூட்டணிக்கு செலுத்துகிற ஓட்டு. அப்படி கிறிஸ்தவர்கள் அணி மாறி ஓட்டுப் போட்டால், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதன்பின், உங்கள் கோரிக்கை ஒரு நாளும் நிறைவேறாது என திமுக நடத்தி வரும் பிரச்சாரத்தில் கூறப்பட்டுள்ளது.