கரூர் தவெக மாவட்ட செயலாளர் தனிப்படை போலீசால் கைது | TVK District Secretary Arrest | Anand | TVK | TV
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மாநிலத்தை உலுக்கி போட்டது. இதில் சதி இருப்பதாக கட்சியினர் பலரும், அரசு மற்றும் விஜய் மீது தவறு இருப்பதாக பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தவெக தரப்பில் முறையான விசாரணை கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அரசு தரப்பில் ஒரு நபர் கமிஷன் விசாரணை நடக்கிறது. காயமடைந்தவர்கள் 59 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை செயலர் சி.டி.நிர்மல்குமார் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் போலீசார் வழக்கு பதிந்தனர். கைது நடவடிக்கை மற்றும் விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் திங்கள் இரவு மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எப்ஐஆரில் முதல் நபராக சேர்க்கப்பட்டு இருந்தவர் இவர் தான். அடுத்ததாக தவெக பொது செயலர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராகா விட்டால் அவர்கள் மீதும் கைது நடவடிக்கை பாயும் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டு உள்ளது.