உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசார் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை! | Two Wheeler Driving | Without Helmet

போலீசார் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை! | Two Wheeler Driving | Without Helmet

ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஓட்டினால் சஸ்பெண்ட்! போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை!இரு சக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தவறினால் போக்குவரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். அடுத்தடுத்து ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் பிடிபட்டால், அவர்களுக்கு அபராதத்துடன், ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் ஒரு சிலர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை படம்பிடித்து, வீடியோ எடுத்து, காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களில், பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். இது, காவல் துறையினருக்கு தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்துகிறது. எனவே ஒழுங்கீனமான போலீசார் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு, டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து மாநிலம் முழுதும் கமிஷனர்கள், எஸ்பிக்கள், வாக்கி டாக்கி வாயிலாக, போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: போலீசார் மற்றும் அதிகாரிகள், போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். காரில் செல்வோர், சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போலீசார், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால், இந்த உத்தரவை காவலர் நிலையில் உள்ள ஆண், பெண் போலீசார் பின்பற்றுவது இல்லை. பெரும்பாலும் பணி முடிந்து வீடு திரும்பும் போது, விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களால் காவல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். காலை 7 மணிக்கு போலீசார் வருகைப்பதிவு சரி பார்க்கப்படும் ரோல்காலில், இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வந்த போலீசார், தங்களிடம் ஹெல்மெட் இருப்பதை உயர் அதிகாரிகளிடம் காண்பித்து உறுதி செய்ய வேண்டும். ஹெல்மெட் இல்லாத போலீசாரை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. அவரிடம் சாவியை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவர், ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற நிறுவனத்தின் ஹெல்மெட் வாங்கி வந்து, அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே, சாவியை கொடுக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார் என கூறினர்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை