உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா-சீனா மோதல்: கவலையில் உலக நாடுகள் United States china fight Donald Trump 104% Tariff Chin

அமெரிக்கா-சீனா மோதல்: கவலையில் உலக நாடுகள் United States china fight Donald Trump 104% Tariff Chin

அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற பிறகு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதிக்கும் முடிவும் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவுகளில் ஒன்று. அமெரிக்க பொருட்கள் மீது பல நாடுகள் அதிக வரி விதித்து தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்கின்றன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சரி செய்ய அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பரம் வரி விதிப்பதே ஒரே வழி என்கிறார், அதிபர் டிரம்ப். அதன்படி, எந்தெந்த நாடுகள் மீது எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை அதிபர் டிரம்ப் கடந்த 2ம் தேதி அறிவித்தார். இந்தியா மீது 26 சதவீதம் வரி, சீனாவுக்கு 34 சதவீத வரி விதித்தார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. டிரம்ப்பின் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரியை கூடுதலாக விதிப்பதாக சீனா அறிவித்தது. இது, வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீனா அறிவித்தது. இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கூடுதல் வரி விதிப்பை திரும்பப்பெற சீனாவுக்கு கெடு விதித்தார். ஏப்ரல் 8-ம்தேதிக்குள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 34 சதவீத கூடுதல் வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் 9-ந்தேதி முதல் சீன பொருட்கள் மீது 50 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறினார். ஆனால், சீனா 34 சதவீத கூடுதல் வரிவிதிப்பை திரும்ப பெறவில்லை. டிரம்ப் விதித்த கெடு முடிந்த நிலையில், அமெரிக்காவுக்கு வரும் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் முடிவு நடைமுறைக்கு வருகிறது என அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் முடிவு எந்த தாமதமும் இன்றி நடைமுறைக்கு வருகிறது. இதுதொடர்பாக அதிபர் டிரம்பிடம் பேசினேன். கூடுதல் வரி விதிப்பை தள்ளிப்போடும் எண்ணம் அதிபர் டிரம்ப்புக்கு இல்லை. டிரம்ப்பை பொறுத்தவரையில் அமெரிக்க பொருளாதாரத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும்தான் முதல் இடம். அதுதான் உலக நாடுகளுக்கு அவர் சொல்ல வரும் செய்தி என, கரோலின் லீவிட் கூறினார். அதோடு மட்டுமின்றி சீனாவுடனான அனைத்து பேச்சு வார்த்தைகள், நடக்கவிருந்த சந்திப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என சீனா கூறியுள்ளது. இது தொடர்பாக சீன பிரதமர் லி கியாங் கூறியதாவது: அமெரிக்காவின் முடிவு தன்னிச்சையானது; ஒரு தலைப்பட்சமானது. பொருளாதார ரீதியாக பிளாக்மெயில் செய்வதாகும். மற்ற நாடுகள் மீது வரிகளை போட்டு தன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள நினைக்கும் அமெரிக்காவின் கொள்கையால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. வெளிப்படைத்தன்மையும், பரஸ்பர ஒத்துழைப்பும்தான் எல்லா நாடுகளுக்கும் நன்மை பயக்கும். ஒரு நாடு எடுக்கும் எதிர்மறையான முடிவுகள் சீன பொருளாதாரத்தை பாதிக்காது. அமெரிக்க முடிவை எதிர்கொள்ளும் வகையில், சீனாவின் பொருளாதார கொள்கைகள் வலுவாக உள்ளன. எந்தவொரு சவாலாக இருந்தாலும் அதை சமாளித்து நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வோம். அதில் சீனா உறுதியாக உள்ளது. பொருளாதார ரீதியாக சீனாவை மிரட்டிப் பார்க்க நினைக்கும் அமெரிக்காவை எதிர்த்து இறுதி வரை போராடுவோம். சீனா தனது நலனை மட்டும் பாதுகாத்துக்கொள்ள நினைக்கவில்லை. மாறாக, உலக நாடுகளின் நலனுக்காகவும்தான் அமெரிக்காவுக்கு எதிராக போராடுகிறது என, சீன பிரதமர் லீ கியாங் கூறினார். அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பரம் வரி விதிக்கும் டிரம்ப்பின் அதிரடி முடிவால் பல நாடுகளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. உலகின் மிக முக்கியமான பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதால் உலகளவில் பொருளாதார நெருக்கடி வருமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை