ஐஏஎஸ் அதிகாரியின் மனிதநேயத்தை பாராட்டும் மக்கள் | Unsupported girl marriage | Ex collector help | I
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ரெட்டவயல் பகுதியை சேர்ந்த கண்ணையா, செல்வி தம்பதியின் மூத்த மகள் பாண்டி மீனா. நர்சிங் படித்த இவருக்கு பாண்டீஸ்வரி என்ற தங்கையும் இருக்கிறார். தந்தை கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், தாய் செல்வி சிறுநீரக பாதிப்பாலும் சில ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இதனால் தங்கையுடன் நிற்கதியாக நின்ற பாண்டி மீனா, 2022ல் அப்போது தஞ்சை கலெக்டராக இருந்த இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தார். குடிசை வீட்டில் 2 பெண்கள் தனியாக பாதுகாப்பின்றி வாழும் தனது நிலையை சொல்லி உதவி கேட்டார். உடனடியாக உதவ முன்வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதி, தன் விருப்ப நிதி, தன்னார்வலர்கள் மற்றும் பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பிலும் நிதி உதவி பெற்று பாண்டி மீனாவுக்கு புதிய வீடு கட்டி கொடுத்தார். அதன் பிறகும் பாண்டி மீனா, தங்கை பாண்டீஸ்வரி இருவரையும் தனது மகள்களாக பாவித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். அதன் உச்சமாக பாண்டி மீனாவுக்கு தனது சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இப்போது பத்திரப்பதிவுத்துறை தலைவராக உள்ள தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நேற்று பேராவூரணியில் பாண்டி மீனாவுக்கும் அபிமன்யு என்பவருக்கும் திருமணம் செய்து வைத்து வாழ்த்தினார். இவளை என் மகளாகவே நினைத்து வளர்த்தேன் நல்லபடியாக பார்த்துக் கொள் என மாப்பிள்ளையிடம் தினேஷ் கூறியதும் பாண்டி மீனா உட்பட அனைவரும் கண்கலங்கினர். இந்த திருமண விழாவில் உறவினர்கள் மட்டுமின்றி தன்னார்வலர்கள், பேராவூரணி லயன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று தனது சொந்த செலவில் திருமணத்தை நடத்தி வைத்த தஞ்சாவூர் முன்னாள் கலெக்டரும், தற்போதைய பத்திரப்பதிவுத்துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.