தீபாவளிக்கு முதல் நாளில் மட்டும் எகிறிய UPI பண பரிவர்த்தனை | UPI transactions | October new record |
இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வரி செலுத்துதல், மருத்துமனைகள், கல்வி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம். இதனால் யுபிஐ பண பரிவர்த்தனை ஒவ்வொரு மாதமும் புதிய ரெக்கார்டை பதிவு செய்து வருகிறது. அக்டோபரில், இதுவரை இல்லாத அளவில் 23.5 லட்சம் கோடி பண பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடந்துள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பரில் 1500 கோடி பரிவர்த்தனைகளை கடந்து சாதனை படைத்த நிலையில், அக்டோபரில் புதிய உச்சமாக 1,658 கோடியாக அதிகரித்துள்ளது. பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில், செப்டம்பரை விட 10 சதவீதம் அதிகம். பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் 14 சதவீதம் அதிகம். தினசரி யுபிஐ பரிவர்த்தனை அளவு 53.5 கோடியாகவும், மதிப்பில் 75,801 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் தினசரி பரிவர்த்தனை 50 கோடியாகவும், மதிப்பில் 68,800 கோடி ரூபாயாகவும் இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30 ஒரு நாளில் மட்டும் 54.6 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.