அமெரிக்கா - சீனா இடையே தீவிரமடையும் வர்த்தக போர் | US -China | Trade war|125% tariffs
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று தான் வரி விதிப்பு. தங்கள் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். முதலில் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு வரி போட்ட டிரம்ப், அடுத்தடுத்து சீனாவுக்கு மட்டும் வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. பின் ஏப்ரல் 2ம் தேதி எல்லா நாடுகளுக்கும் பரஸ்பர வரி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இந்தியாவுக்கு 26 சதவீதம், சீனாவுக்கு 34, ஜப்பானுக்கு 24, பாகிஸ்தானுக்கு 30, வங்கதேசத்துக்கு 37, ஐரோப்பிய நாடுகளுக்கு 20, இஸ்ரேலுக்கு 17, இலங்கைக்கு 44 சதவீதம் உட்பட பல நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். டிரம்பின் இந்த புதிய வரி விதிப்பு 9ம் தேதி நடைமுறைக்கு வந்த பிறகு சர்வதேச வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. வரி அமலுக்கு வந்த 24 மணி நேரத்துக்குள் திடீரென டிரம்ப் யூடர்ன் போட்டார். 90 நாட்களுக்கு பரஸ்பர வரியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தவர், சீனாவுக்கான வரி விதிப்பை மட்டும் வாபஸ் பெறவில்லை. மாறாக 20 சதவீதம் கூடுதல் வரி விதித்து சீனாவை அலற விட்டார். இதனால் சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 105 சதவீதமாக உயர்ந்தது. இதனால் கடுப்பான சீனா, ஏற்கனவே அறிவித்த 34 சதவீதம் வரியுடன் 50 சதவீதத்தை சேர்த்து ஒரே நேரத்தில் 84 சதவீத வரியை அமெரிக்கா மீது இறக்கியது.