உத்தரகாசியில் ஏற்பட்ட பேரிழப்பின் பின்னணி | Uttarakhand | Cloudburst | Flood | Landslide | Encroachm
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாயன்று மேக வெடிப்பால் கொட்டிய கடும் மழையால் கிர் கங்கா ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கங்கோத்ரி அணையை நோக்கி பாயும் வழியில் தாராலி கிராமத்தை கடந்தபோது நிலச்சரிவும் ஏற்பட்டதால் பல வீடுகள், ஓட்டல் கட்டடங்கள் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவுடன் பாய்ந்து வந்த வெள்ளம் அதன் வழித்தடத்தில் இருந்து விலகி கட்டடங்களை மூழ்கடிப்பதும், ஒரு பக்கம் கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் வெள்ளம் பாயும் காட்சிகள் வெளியாகி பதற வைத்தன. சம்பவ இடத்திற்கு 3வது நாளாக தேசிய, பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேர் இறந்தது உறுதியாகி உள்ளது. 70 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுவதால் அவர்களை தேடும் பணி தொடருகிறது. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து, சேறு, பாறை இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து, இத்தனை பெரிய சேதம் ஏற்பட அபரிமிதமாக பெய்த மழை மட்டுமே காரணம் அல்ல என்கின்றனர் நிபுணர்கள். அந்த பகுதியில் 3 முதல் 4 நாட்கள் தொடர் கனமழை பெய்ததால் தாராலியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மலை பகுதிகளில் பெரும்பாலும் மேக வெடிப்புகள், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும், தாராலியில் பாதிப்பு அதிகரித்ததற்கு ஆற்றின் இயற்கை வழி பாதையில் மனிதர்களின் தலையீடு தான் காரணம் என்கின்றனர். ஆற்றின் நீர் வழி தடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்கள் நீரோட்டத்தை மாற்றி வைத்திருந்தன. வெள்ளம் ஏற்பட்டபோது அதனுடன் சேர்ந்த மண்சரிவும் பாய்ந்து செல்ல போதுமான வழத்தடம் இல்லாமல் அது அதிக வேகத்துடன் கட்டடங்கள் மீது மோதி பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற நிலச்சரிவு ஆபத்து உள்ள ஆற்றுப் படுகை பகுதிகளில் கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த இடத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய செயற்கைகோள் ஆய்வின்படி சுமார் 148 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 16 ஹெக்டேர் பரப்பளவு நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேடு ஒரு பாலம், கிட்டத்தட்ட 1 கி.மீ சாலை உட்பட முக்கியமான உள்கட்டமைப்புகளும் சேதம் அடைந்துள்ளன. உத்தரகாசி துயர சம்பவம், ஆற்றுப் படுகைகள் மட்டுமின்றி அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்க நில பயன்பாட்டு கொள்கைகளை ஒழுங்குபடுத்தி அமல்படுத்த வேண்டியதன் அவசர தேவையை நமக்கு உணர்த்துகிறது.