மதவாதம் பற்றி திமுக பேசலாமா?: வானதி தாக்கு! Vanathi Srinivasan | BJP | Stalin | DMK
பாஜ எம்எல்ஏ வானதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்ற வழக்கமான அவதூறை மீண்டும் பரப்பியிருக்கிறார். மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், எந்த அளவுகோலின்படி, தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதோ, அதன்படி தான் இப்போதும் நிதி வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசுக்கு எதிரான எண்ணத்தை தமிழக மக்களிடம் விதைக்கும், குறுகிய அரசியல் நோக்கோடு மத்திய அரசை ஸ்டாலின் எப்போதும் குறைகூறிக் கொண்டே இருக்கிறார். அதிமுக - பாஜ கூட்டணி அறிவிக்கப்பட்டது முதலே, ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தூக்கத்தில் கூட அதிமுக, பாஜ கூட்டணியைப் பற்றி புலம்பி தீர்க்கின்றனர். இந்நிலையில் மதுரையில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்ட மாபெரும் முருக பக்தர்கள் மாநாடு, ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை அறுவடை செய்வதற்காக, இந்து மதத்தை, இந்து கடவுள்களை மட்டுமே கேலி, கிண்டல் பேசும் திமுக மதவாதம் பற்றி பேசலாமா? திமுக ஆட்சியில் இந்து கோயில்கள், இந்துக்களிடம் இல்லை. கோயில் திருவிழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்திலும், நாத்திக, இந்து மதத்தின் வெறுப்பு கொண்ட திமுகவினர் தலையிடுகிறார்கள். இதைக் கேட்டால் மத வாதமா? சனாதன தர்மமான இந்து மதத்தை, கொசு போல ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டு, தமிழகத்தில் இந்து மதத்துக்கு ஆபத்து இல்லை என்கிறார். இதைவிட வெறுப்பு அரசியல் இருக்க முடியுமா? முருக பக்தர்கள் மாநாட்டில் திரண்ட கூட்டமும், அவர்கள் நடந்து கொண்டு கண்ணியமும், பக்தியும் ஸ்டாலினுக்கு பெரும் கலக்கத்தை, நடுக்கத்தை, தோல்வி பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாத ஸ்டாலின், நாங்கள் இந்துக்களின் எதிரி அல்ல என பேசத் துவங்கியிருக்கிறார். முருக பக்தர்கள் மாநாட்டு வெற்றியால் பதைபதைத்துப் போன இந்து விரோதிகள், எதையாவது செய்து அதிமுக - பாஜ கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். அது ஒருநாளும் நடக்கப் போவதில்லை, என வானதி கூறி இருக்கிறார்.