பாக் பிரதமர் செஞ்ச பகீர்... வீடியோ வைரல் meloni viral reaction | shehbaz sharif viral video | trump
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த தீவிர போர், அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தார், எகிப்து நாடுகள் நடத்திய மத்தியஸ்தம் காரணமாக இப்போது முடிவுக்கு வந்து விட்டது. காசாவில் அடுத்து என்ன செய்யலாம் என்பது தொடர்பாக விவாதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் காசா அமைதி உச்சி மாநாடு எகிப்தில் கூடியது. பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், பாகிஸ்தான், துருக்கி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது பல விஷயங்களை டிரம்ப் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். வழக்கம் போல் பல போர்களை நிறுத்தினேன் என்று பெருமை பேசினார். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடம் நம் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு வளர்க்கும் பாகிஸ்தானையும் அதன் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பையும் பாராட்டி பேசினார். டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது மேடையில் அவருக்கு பின்னால் பல நாடுகளின் தலைவர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பேச்சை முடித்த டிரம்ப், பின்னால் நின்றிருந்த பாகிஸ்தான் பிரதமரை வந்து பேசுங்கள் என்று சட்டென அழைத்தார். ஒருவித பதற்றத்துடன் வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், பின்னர் சொல்லி வைத்தது போல் டிரம்பை புகழ்ந்து தள்ளினார். இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போரை டிரம்ப் தான் நிறுத்தினார். அணு ஆயுத போரை நிறுத்தி பல லட்சம் மக்கள் உயிரை காப்பாற்றினார். இப்போது காசாவிலும் அமைதியை கொண்டு வந்து, பல லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். டிரம்ப் அமைதியின் மனிதர். அவருக்கு அடுத்த முறை நிச்சயம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் அடித்து விட்டார். கொஞ்சம் கூட தயக்கம் இன்றி டிரம்பை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியதை பார்த்த ஜெர்மனி பிரதமர் ஜியார்ஜியா மெலானி, சிரிப்பை அடக்க முடியாமல் நின்றார். சர்வதேச தலைவர்கள் இடையே விதவிதமான ரியாக்ஷனுக்கு பெயர் போன மெலானி, பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்கு கொடுத்த ரியாக்ஷன் தான் இப்போது உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் பேசுவதை பார்த்து வாயில் விரல்களை வைத்து வியப்புடன் நின்றார். ‛என்னடா இந்த மனுஷன் கொஞ்சம் கூட கூச்சமே இன்றி, டிரம்பை பாராட்டி அப்படி இப்படி என்று அள்ளி விடுறாரு என்பது போல் மெலானி ரியாக்ஷன் இருப்பதாக நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர்.