கடின உழைப்பால் முன்னேறி பலருக்கும் உத்வேகம் தந்தவர்
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் VKT பாலன் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பக்கவாதம் பாதிப்பு காரணமாக இறந்தார். அவரது உடல் மந்தைவெளி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச்சடங்கு செவ்வாயன்று நடைபெற உள்ளது. திருச்செந்தூரில் பிறந்த பாலன், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார். தங்குவதற்கு இடமின்றி தவித்தார். விசாவுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வோருக்காக முன்பாகவே சென்று வரிசையில் இடம் பிடித்து கொடுத்து சம்பாதிக்க தொடங்கினார். அப்போது டிராவல் துறையை சேர்ந்த சிலரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அதன் மூலம் 1986-ல் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். தமது கடின உழைப்பால் முன்னேறி, இன்று டிராவல்ஸ் துறையின் முன்னோடியாக விளங்குகிறார்.