பாகிஸ்தானுக்கு எதிராக POK-வில் மக்கள் புரட்சி-பரபரப்பு pok protest | ind vs pakistan | pok shooting
நாடு பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய பாகிஸ்தான், பின்னர் அதை ஆக்கிரமித்துக்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று சில ஆண்டுகளாகவே அங்குள்ள மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடக்கிறது. வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவற்றில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாராபாதில் நேற்று மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இதனால் அங்குள்ள சந்தைகள், கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கங்கள் எழுப்பினர்; ஊர்வலம், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டசபை தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும்; மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் உட்பட 38 அம்ச கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். சம்பவ இடத்துக்கு ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய வீரர்களையும் பாகிஸ்தான் அரசு குவித்தது. மக்கள் அணி திரள்வதை தடுக்க, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போர்க்களமாக மாறியுள்ளது. தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. ஐபேப்பர்