வாக்கி டாக்கி வெடிக்கும் போது நடந்த பகீர் சம்பவம் | Israel vs Hezbollah | Pager walkie talkie Blast
நெஞ்சை உறைய வைத்த நிமிடம் வாக்கி டாக்கி வெடித்தபோது பகீர் என்ன நடந்தது தெரியுமா? லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கராவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர், வாக்கி டாக்கி அட்டாக் உலகையே அதிர வைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஹிஸ்புல்லா பயன்படுத்திய 5000 பேஜர்கள் வெடித்து சிதறின. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் மறுநாள் வெடித்து சிதறின. 2 சம்பவங்களிலும் சேர்த்து மொத்த மரணம் 32. காயம்பட்டவர்கள் 3300 பேர். கவலைக்கிடமாக இருப்பவர்கள் எண்ணிக்கை 100. இந்த 2 தாக்குதலுக்கு பிறகு மொத்த லெபனான் மக்களும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். எலக்ட்ரானிக் சாதனங்களை பார்த்தாலே நடுங்குகின்றனர். பேஜர் வெடிப்பை தொடர்ந்து நடந்த வாக்கி டாக்கி அட்டாக்கின் திக் திக் நொடிகள் எப்படி இருந்தன என்பதை லெபனான் மக்கள் நடுக்கத்துடன் விவரித்தனர். செவ்வாய்க்கிழமை நடந்த பேஜர் அட்டாக்கில் ஒரு சிறுவன், சிறுமி மற்றும் 10 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிறுவன் மற்றும் 2 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு தெற்கு பெய்ரூட்டில் தகியே என்ற இடத்தில் நடந்தது. 3 பேரின் உறவினர்கள், அண்டை வீட்டார் என பல நூறு பேர் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அந்த நேரத்தில் தான் வாக்கி டாக்கி அட்டாக் நடந்தது. ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லாக்களின் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. இறுதிச்சடங்கிலும் வாக்கி டாக்கி வெடித்தது. அதே நேரத்தில் ஆங்காங்கே வாக்கி டாக்கி வெடிக்கும் சத்தமும், மக்களின் அலறல் சத்தமும் கேட்டது. இறுதிச்சிடங்கில் பங்கேற்றவர்கள் பலர் உடல் சிதறினர். உயிர் தப்பிக்க அலறியடித்து ஓடினர். சிலர் துப்பாக்கிச்சூடு நடக்கிறது என்று நினைத்து தரையில் படுத்துக்கொண்டனர். முந்தைய நாள் பேஜர் வெடித்ததால், அங்கு இருந்த ஹிஸ்புல்லா படையினருக்கு என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது. அவர்களில் ஒருத்தர் மைக்கை பிடித்து ஆவேசமாக கத்தினார். எல்லோரும் உங்கள் செல்போனை எட்டி வீசி விடுங்கள். அல்லது பேட்டரியை கழற்றி தூர வீசுங்கள் என்று அறிவித்தார். மக்களுக்கும் பயம் வந்து விட்டது. அடுத்து செல்போன் வெடித்து விடுமோ என்று அஞ்சி நடுங்கினர். செல்போன்களை எட்டி வீசிவிட்டு உயிர் பயத்தில் உறைந்து நின்றனர். சிலர் பேட்டரிகளை கழற்சி வீசினர். இன்னும் சிலர் தங்கள் சிம் கார்டுகளையும் தெருவில் வீசினர். சோசியல் மீடியாக்களில் வதந்தி கட்டவிழ்த்து விடப்பட்டது. அடுத்து செல்போன், லேப்டாப், சோலார் தகடுகள் வெடிக்கும் என்று தகவல் பரவியது. எங்களுக்கு பயமாக இருக்கிறது. எப்படி செல்போன்களை இனி பயன்படுத்துவோம். லேப்டாப் முன்பு எப்படி உட்காருவோம். எங்கள் உயிருக்கு உத்தரவாதமே இல்லை. அடுத்து என்ன வெடிக்கும் என்று தெரியவில்லை என லெபனான் மக்கள் கதறினர்.