கணவன் 2வது திருமணம்: அதிரடி காட்டிய இளம்பெண் young woman protest with child tirupathur tamilnadu po
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் காளிமுத்து (23). ஆலங்காயம் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் சூரிய பிரியாவும், காளிமுத்துவும் வாணியம்பாடி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியில் 3 ஆண்டுக்கு முன் படித்தனர். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால், 3 வருடத்துக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு பெங்களூருவுக்கு ஓடினர். திருமணம் செய்து கொண்டு, தனிக்குடித்தனம் நடத்தினர். கடந்த ஆண்டு சூரிய பிரியா கர்ப்பம் தரித்தார். அந்த சமயத்தில் அம்மா, அப்பாவை பார்த்து விட்டு வருவதாக கூறி காளியப்பன் தன் வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு அவர் மனைவியிடம் திரும்பி வரவே இல்லை. இதனால் தனிமையில் தவித்த சூரிய பிரியா வேறு வழியின்றி தாய் வீட்டுக்கு திரும்பினார். கடந்த ஆண்டு இறுதியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தைக்கு இப்போது 10 மாதங்கள் ஆகிறது. குழந்தையை இதுவரை பார்க்க வரவில்லை. இந்நிலையில், காளிமுத்துவுக்கு 2வது திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதை அறிந்து சூரிய பிரியா கொந்தளித்தார். கணவனுக்கு போன் போட்டு பேசினார். மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றார். ஆனால், 50 சவரன் நகைகளை வரதட்சணையாக கொண்டு வந்தால்தான் நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும்; நான் 2வது திருமணம் செய்து கொள்கிறேன். நீ விரும்பிய படி, நீயும் இரு என காளிமுத்து கூறியுள்ளார். இதனால் ஆவேசமான சூரியபிரியா காதல் கணவன் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டார். சூரிய பிரியாவின் பெற்றோர் உறவினர்களும் வந்ததால், பயந்து போன காளிமுத்து தப்பி ஓடிவிட்டார். காளிமுத்துவுடன் சேர்த்து வைக்க வேண்டும்; என் குழந்தைக்கு நீதி வேண்டும் என சூரியபிரியா வலியுறுத்தினார். அப்போது, காளிமுத்துவின் தந்தைக்கும் பெண்ணின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் வீட்டாரை அடிக்க காளிமுத்துவின் தந்தை பச்சையப்பன் பாய்ந்தார். இதனால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நாட்றம்பள்ளி போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமரசப்படுத்தி சண்டையை தடுத்தனர். வரதட்சணை கொடுக்காததால் 2வது திருமணம் செய்ய முயற்சி செய்யும் கணவன் காளிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூரியபிரியா கூறினார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய காளிமுத்துவை தேடி வருகின்றனர். வரதட்சணை கொண்டு வராத காரணத்துக்காக காதலித்து குழந்தையை கொடுத்து விட்டு ஓடிய கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் நடத்திய தர்ணா போராட்டம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #YoungWoman #Protest #Child #Tirupathur #TamilNadu #Police #Crime #DowryIssue #HusbandEscaped #LoveMarriage #JusticeForWomen #BRavenews #Awareness #Empowerment #SocialJustice #StopDowry #WomenRights #RiseUp #VoicesForChange #StandTogether