நீதி கிடைக்கவில்லையென தமக்கு தாமே தண்டனை
குஜராத்தின் சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சி நிர்வாகி கோபால் இத்தாலியா மேடையில் பேசும்போது, பாஜ ஆளும் மாநிலத்தில் பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி, தமது பேன்ட் பெல்டை கழற்றி தம்மை தாமே அடித்து கொண்டார். முன்னதாக, ஆம்ரேலியில் பாஜ தலைவர் ஒருவரை இழிவுபடுத்த முயன்றதாக பெண் மீது வழக்கு பதியப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய கோபால், பாஜ ஆட்சியில் ஊழல்வாதிகளாக உள்ள தலைவர்கள், அதிகாரிகளால் மக்கள் நீதி கிடைப்பது கடினமாகி விட்டது என்றார். இது மட்டுமல்ல, மார்பி தொங்கு பாலம் இடிந்தது, வதோதரா படகு கவிழ்ந்தது, கள்ளச்சாராய சோகங்கள், தீ விபத்துகள், ஆட்தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பல சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் நீதி கிடைக்க செய்ய முடியவில்லை. குஜராத்தின் ஆன்மாவை எழுப்ப விரும்புகிறேன் எனக்கூறி அவர் பெல்ட்டால் அடித்து கொண்டார். இது, சமீபத்தில் திமுக அரசை கண்டித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் தம்மை தாமே அடித்து கொண்டதை நினைவுபடுத்தியது.