நடிகர் எஸ்வி சேகருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு எப்போது actor sve shekher case| high court
நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்வி சேகர், கடந்த 2018ல், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து இருந்த கருத்தை, தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கம் அளித்தது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு கோர்ட், கடந்த பிப்ரவரியில் எஸ்வி சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து எஸ்வி சேகர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை தண்டனையை ஐகோர்ட் நிறுத்தி வைத்தது. இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்வி சேகரின் வக்கீல் வாதிடும்போது, சோஷியல் மீடியாவில் தவறுதலாக எஸ்விசேகர் கருத்தை பகிர்ந்தார். அந்த கருத்தை நீக்கியதுடன், உடனடியாக மன்னிப்பும் கேட்டுள்ளார் எனத்தெரிவித்தார். அப்போது நீதிபதி, எந்த பதிவுகள் வந்தாலும், படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? படிக்காமல் பகிர்ந்ததாக சொன்னால், எதற்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள்? என கேட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு கோர்ட்டில் இருந்து ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.