உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவினருக்கு அட்வைஸ் செய்த அமித்ஷா! | Amit Shah | BJP | ADMK Alliance | EPS

அதிமுகவினருக்கு அட்வைஸ் செய்த அமித்ஷா! | Amit Shah | BJP | ADMK Alliance | EPS

சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு? அமித்ஷா சொன்னது என்ன? 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது. 2023 செப்டம்பரில் பா.ஜ. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. பா.ஜ.வுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை. அதனால்தான் தோற்றோம என, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க. உடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க. விரும்புகிறது. விஜய் அதற்கு உடன்படவில்லை. எனவே பா.ஜ. - பா.ம.க. - தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.வுடன் கூட்டணி அமைக்காவிட்டால், கோவை, திருப்பூர், நீலகிரி, சென்னை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது என அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கருதுகின்றனர். மாநில நிர்வாகிகளும் இதை உணர்ந்துள்ளனர். ஆனால் ஜெயகுமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் போன்றோர், பா.ஜ.வுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க.வுக்கு சென்று, அ.தி.மு.க. கூட்டணி வழக்கம் போல் தோற்றுவிடும் எனக் கூறி வருகின்றனர். பா.ஜ. கூட்டணியை விரும்பும், கொங்கு மண்டல, தென்மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்த அச்சம் பெரிய அளவில் உள்ளது. அதனாலேயே எப்படியாவது பா.ஜ.வுடன் கூட்டணி வைத்தாக வேண்டும் என, கட்சித் தலைமைக்கு அவர்கள் பல வழிகளிலும் எடுத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால் பழனிசாமி இதை ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26ல், கோவை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் ரகசியமாக சந்தித்து உள்ளனர். அப்போது பா.ஜ.வுடன் கூட்டணி வைக்க, எங்களுக்கு விருப்பம்தான். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது எனக் கூறியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் தேர்தலில் வெல்ல முடியாது என்பது மாயை. அதை ஹரியானா, திரிபுரா, மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பா.ஜ. ஏற்கனவே நிரூபித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, யார் தலைகீழாக நின்றாலும், சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலேயே, சிறுபான்மையினர் ஓட்டுகளில் 70 சதவீதத்துக்கு மேல் தி.மு.க.வுக்கு தான் கிடைத்தது. பா.ஜ.வுடன் கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும், அவர்களின் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. அந்த ஓட்டுகளை நம்பினால், அரசியலில் காணாமல் போய் விடுவீர்கள். தி.மு.க.வின் ஓட்டு வங்கியான, சிறுபான்மையினர் ஓட்டு வரும் என காத்திருக்காமல், தி.மு.க.வுக்கு எதிரான ஓட்டுகளை பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மையின ஓட்டுகள் 20 சதவீதம் என எடுத்துக் கொண்டால், மீதம் இருக்கும் 80 சதவீத ஓட்டுகளில் 50 சதவீத ஓட்டுகளை பெற அ.தி.மு.க. திட்டமிட வேண்டும் எனக் கூறியதாக பா.ஜ. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ