ஓட்டு வங்கி அரசியலுக்காக சட்ட விரோத ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
#AmitShahSpeechonSIR| #Biharelection| #Modi|#PMModiBirthday|#AmithShahSlamsCongress| #RahulsVoterAdhikarYatra| #BJP| #Congress| #Votetheft| பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி உரையாற்றினார். உலக மக்களால் விரும்பப்படும் ஆகச் சிறந்த தலைவர் நரேந்திர மோடி. அவரின் 75வது பிறந்த நாளில் நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். உலகின் படைப்பு கடவுளாக விளங்கும் விஸ்வகர்மா ஜெயந்தியும், மோடியின் பிறந்த நாளும் இந்த ஆண்டு ஒரே நாளில் வந்ததில் மகிழ்ச்சி. பல தலைவர்களும் தங்கள் பிறந்த நாளை பல்வேறு வகையில் கொண்டாடுகின்றனர். ஆனால், நரேந்திர மோடி தன் பிறந்த நாளை நாட்டு மக்களுக்கான சேவையாக கொண்டாடவே விரும்புகிறார். மோடி பிரதமரானதில் இருந்து, கடந்த 11 ஆண்டுகளாக, செப். 17 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, மக்கள் சேவையாகவே அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி வார்டுகள், பஞ்சாயத்துகள், கிராமங்கள், நகரங்கள் வரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதே போல், இன்றும் 17 நலத்திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் தான் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டனர். நாட்டு மக்கள் இடையே மோடி எவ்வித பாகுபாடும் காட்டியதில்லை. அனைத்து தரப்பினரையும் ஒன்றாக பாவிக்கிறார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், ஏர் ஸ்ட்ரைக், ஆபரேஷன் சிந்துார் என அடுத்தடுத்த நடவடிக்கைகளால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டி, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தவர் மோடி. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவே முடியாது என்றவர் ராகுல். ஆனால், அதை சாத்தியப்படுத்தி நாட்டு மக்களின் ஆசையை நிறைவேற்றியவர் மோடி. தற்போது உலகெங்கும் இருந்து பக்தர்கள் ராமரை தரிசிக்க அயோத்திக்கு வருவதை பார்க்கிறோம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய ஆர்ட்டிக்கல் 370 நீக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்பினர். 2வது முறை பிரதமர் ஆனதும் அதை நிறைவேற்றிக் காட்டினார் மோடி. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, மோடியின் ஆட்சியில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் 3வது இடத்தையும் பிடிப்போம். இன்னும் சில நாட்களில் நவராத்திரி உற்சவம் துவங்க உள்ளது. பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. பல பொருட்களின் வரி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அதே சமயம் மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரான சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். நம் செயல்கள் அனைத்தும் நாட்டு மக்கள் நலன் கருதியும், நாட்டின் முன்னேற்றத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் காங்கிரசார் அப்படி நினைப்பதில்லை. சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவியர்களை ஆதரிக்கின்றனர். அவர்களை காப்பற்ற துடிக்கின்றனர். ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதற்காக ராகுல் பேரணி நடத்துகிறார். அவர்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத் தந்து, வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களை இடம் பெறச் செய்ய முயற்சிக்கிறார். ஏனென்றால், நம் நாட்டு மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. ஊடுருவல்காரர்களின் ஓட்டுகளால் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். தேர்தல் கமிஷன் நடத்தும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணியை பாஜ ஆதரிக்கிறது. போலி வாக்காளர்கள் இல்லாத வகையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் நடவடிக்கைக்கை வரவேற்கிறது என அமித் ஷா பேசினார்.