உருட்டல் மிரட்டல்களுக்கு பணிந்து போக மாட்டோம் annamalai| bjp| senthil balaji| dmk| tneb| adhani
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்ப, திரும்ப கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமது வார்த்தை விளையாட்டின் மூலம், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்வாரியத்தின் ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. மேல்முறையீடு ஆணையத்தின் உத்தரவுப்படியே 568 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தியதாக அமைச்சர் செந்தில் கூறுகிறார். ஆனால், மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2021ல் நிராகரித்ததை மறந்து விட்டார். அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில், இது தொடர்பாக, 544 கோடி ரூபாய் வருவாயும், 205 கோடி தாமத கட்டணமும் தமிழக மின்வாரியத்திடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்பட்டு இருப்பதை மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? உண்மையில் அதானி நிறுவனத்திற்கு செலுத்திய மொத்த கட்டணம் என்ன என்பதை அமைச்சர் செந்தில் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் 568 கோடிக்கு என்ன கணக்கு? உயர்த்தப்பட்ட விலையான 7 ரூபாய் 1 பைசா விலையில் தமிழக மின்வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்த வகையில், கடந்த நிதி ஆண்டில் 99 கோடி ரூபாய் கூடுதல் கட்டணம் பெற்று இருப்பதாக அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, 5 ரூபாய் 10 காசுக்கு 1 யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்ததாக எதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். திமுக அரசு நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதாக அமைச்சர் சொல்கிறார். அதில் அதானி நிறுவனம் இல்லையா? அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிடும்போது, மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் எழத்தான் செய்யும்.