உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சர் காந்தியை அலற விடும் அண்ணாமலை | Annamalai vs Minister Gandhi | Gandhi DMK | BJP vs DMK

அமைச்சர் காந்தியை அலற விடும் அண்ணாமலை | Annamalai vs Minister Gandhi | Gandhi DMK | BJP vs DMK

கமிஷன் காந்தி சப்பைக்கட்டு பொளந்துகட்டிய அண்ணாமலை! புள்ளி விவரத்துடன் மீண்டும் புட்டு புட்டு! பொங்கல் தொகுப்புடன் வழங்கும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் அமைச்சர் காந்தி ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருப்பதாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இந்த ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐஏஎஸ் அதிகாரியை அமைச்சர் காந்தி இப்போது இடமாற்றம் செய்ய வைத்திருக்கிறார் என்று அண்ணாமலை கூறி இருந்தார். அண்ணாமலைக்கு பதில் அளித்த அமைச்சர் காந்தி, அவரது குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றார். நிர்வாக ரீதியில் அதிகாரிகளை மாற்றுவதை திரித்து கூறி அரசுக்கு களங்கம் ஏற்படுத்த அண்ணாமலை முயற்சிப்பதாகவும் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவரது அறிக்கை: பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதை தமிழக பாஜ தொடர்ந்து 2வது ஆண்டாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைத்தபோது, பதில் சொல்லாமல் ஒளிந்து கொண்ட அமைச்சர் காந்தி, இந்த ஆண்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும் நான்கைந்து பக்கங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். நூல் மாதிரிகளை தரப்பரிசோதனைக்கு அனுப்பி, தேர்வு பெற்ற நூல் லாட்டுகள் மட்டுமே கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்படுகிறது; இத்திட்டத்தை கண்காணித்து செயல்படுத்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார் அமைச்சர் காந்தி. அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, இத்தனை தரப் பரிசோதனைக்கு பிறகு அனுப்பப்படும் நூலில் நெய்த வேட்டிகளில், எப்படி சுமார் 20 லட்சம் வேட்டிகள், 65 சதவீதத்துக்கும் அதிகமான அளவு பாலியஸ்டர் கலந்திருப்பதாக நிராகரிக்கப்பட்டன? தவறு நூல் அனுப்பியதிலா அல்லது வேட்டி நெய்ததிலா, எங்கே தவறு நடைபெற்றிருக்கிறது என்பதை அமைச்சர் காந்தி தெரிவிப்பாரா? கடந்த ஆண்டு 100 சதவீதம் பருத்தி இருக்க வேண்டிய வேட்டியின் வார்ப் பகுதியில், வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருந்ததையும், மீதம் 78 சதவீதம் பாலியஸ்டர் இருந்ததையும், பரிசோதனை மூலம் கண்டறிந்து, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வேட்டி உட்பட அனைத்து ஆதாரங்களுடன் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் நாங்கள் புகாரளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாகவாசமாக ஒரு ஆண்டுக்குப் பிறகு வந்து, கடந்த ஆண்டு 100% பருத்தி இருந்தது என்று பொய் சொல்கிறார் காந்தி. திமுக ஆட்சி இருக்கும் வரை, அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். திமுக ஆட்சி நிரந்தரமில்லை என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கடந்த ஆண்டு தமிழக பாஜ எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலையில் கைத்தறித் துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம், கண்துடைப்புக்காக அல்லாமல், அதிகப்படியான மாதிரிகளை முதன்முறையாக தரப்பரிசோதனை செய்தும், தரம் குறைந்த வேட்டிகளை திருப்பி அனுப்பி, அவற்றின் எண்ணிக்கைக்கு ஈடான வேட்டிகளை மீண்டும் அனுப்பக் கோரியிருந்தார். அதனால் அவரை மாற்றி விட்டீர்கள். பதவிக்கு வந்து ஆறே மாதத்தில், ஒரு ஐஏஎஸ் அதிகாரியைப் பணிமாற்றம் செய்வது தான் உங்கள் வழக்கமான அதிகாரிகள் பணிமாற்றமா அமைச்சர் அவர்களே? தமிழக மக்கள் என்ன முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அமைச்சர் கமிஷன் காந்தி, தன் ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல், உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை