கம்யூனிஸ்ட் எம்பிக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி | Annamalai | BJP
ஜனநாயகத்தை பறைசாற்றும் பார்லிமென்ட்டில் மன்னராட்சியை நினைவுபடுத்தும் செங்கோலை வைக்கக்கூடாது என மதுரை எம்.பி வெங்கடேசன் லோக்சபாவில் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கலாச்சாரத்தின் பெருமையான செங்கோலையும், பண்டைய தமிழக மன்னர்களையும் அவமானப்படுத்திவிட்டு, பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்ததும் செங்கோலுக்கு புதியதோர் விளக்கம் கொடுக்க வெங்கடேசன் முயற்சித்திருக்கிறார். ஜனநாயகத்தில் நீதி மற்றும் அறத்துக்கு இடமில்லை என்று வெங்கடேசன் சொல்கிறார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத இண்டி கூட்டணி கட்சிகளிடம் இல்லாத நீதி, அறம், ஜனநாயகத்தில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே, பார்லிமென்ட்டில் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கும் இரண்டு தொகுதிக்கும், திமுகவிடம் ஒட்டு மொத்த கட்சியையுமே அடகு வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு, இவற்றை எல்லாம் பேச தகுதி உள்ளதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? காலாவதியான ஒரு சித்தாந்தத்தை, தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்கு பிடித்த கேடு. தமிழக எல்லை வரை காங்கிரஸுடன் கூட்டணி, கேரளாவிற்குச் சென்றால், காங்கிரஸ் எதிர்ப்பு என்று, ஒவ்வொரு மாநில மக்களையும் கம்யூனிஸ்ட் கட்சி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது.