திமுக அரசின் பாராமுகம்: அண்ணாமலை கடும் தாக்கு | Annamalai | primary milk producers
தமிழகத்தில், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2000 பேர் உள்ளனர். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள்தான், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து, அடுத்த நிலையில் உள்ள மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கொண்டு செல்பவர்கள். ஆனால், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும், தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. இது குறித்து, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம், பலமுறை கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு பாராமுகமாக இருப்பது துரதிருஷ்டவசமானது. பொதுவாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, ₹1,000 முதல், ₹2,734 வரையே வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த மாத வருமானம் காரணமாக, பெரும்பாலான தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணையாததால், அவர்களுக்கு இந்தக் குறைந்தபட்ச ஓய்வூதியம் கூட கிடைக்காமல் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறார்கள்.