இறந்தவர்கள் பற்றி அவதுாறு பேசுவதே ராகுலுக்கு வாடிக்கை Arun Jaitley| Rohan Jaitley| Rahul| Congress|
டில்லியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தது. இதில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உரையாற்றினார். சுதந்திரத்திற்காக காங்கிரசார் பலர் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி அமைவதற்கே வழக்கறிஞர்கள் தான் காரணம். மூத்த, திறமையான வக்கீல்கள் சேர்ந்து தான், காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக சட்டப்பூர்வமான போராட்டம் நடத்தப்பட்டது. அதிலும் நம் வக்கீல்களின் பங்கு மிக அவசியமானதாக இருந்தது. திறமையான வக்கீல்கள் உருவாக்கிய சட்டத்துறை என்ற கட்டடம் இன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மோடி ஆட்சியில் விவசாய சட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக என்னை மிரட்டினர். அப்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எனக்கு மிரட்டல் விடுத்தார். விவசாய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார். ஆனால், நீங்கள் யாரிடம் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என தெரியாமல் பேசுகிறீர்கள் எனக் கூறி, அனுப்பிவிட்டேன். பிரதமர் மோடி தலைமையிலான தற்போதை அரசு, முழு பலம் இல்லாத அரசாக உள்ளது. வெறும் 15 எம்பிக்கள் பலம் குறைந்தால், பல மாற்றங்கள் நடக்கும். மோடி பிரதமராக நீடிக்கவே முடியாத நிலை ஏற்படும் என, ராகுல் பேசினார். ராகுலின் பேச்சுக்கு மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் பிரபல வக்கீலுமான ரோஹன் ஜெட்லி பதில் அளித்துள்ளார். ராகுல் என்ன பேசுகிறார் என்பதை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார். என் தந்தை மிகச் சிறந்த ஜனநாயகவாதி. யாரையும் மிரட்டும் தன்மை கொண்டவர் அல்ல. அவர் எல்லா விஷயங்களுக்கும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என நினைப்பவர். விவசாய சட்டம் அறிமுகமானது 2020ம் ஆண்டு. ஆனால், என் தந்தை அதற்கு முன்பே 2019ம் ஆண்டில் காலமாகிவிட்டார். அப்படி இருக்கையில், என் தந்தை மீது ராகுல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். ஒரு வேளை ராகுல் சொல்வது போல் நடந்திருந்தால், அவர் அப்போதே அதை பொது வெளியில் வைத்து விவாதப் பொருள் ஆக்கியிருக்கலாம். அவரின் செயலும், பெயரும் பல காலங்களுக்கு பேசப்பட்டிருக்கும். ஆனால், இல்லாத ஒருவர் பற்றி ராகுல் என்ன பேசுகிறோம் என்பது கூட அறியாமல் பேசுகிறார். அதை அவர் வாடிக்கையாகவும் வைத்துள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோர் பாரிக்கரின் கடைசி நாட்களைப் பற்றி மிக மோசமான வகையில் ராகுல் விமர்சித்தார். தற்போது என் தந்தையை பற்றி விமர்சித்துள்ளார் என ரோஹன் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.