கெஜ்ரிவாலை காலி செய்த 2 விஷயங்கள்: ஹசாரே சொன்னது | Arvind Kejriwal | Anna Hazare | Election
டில்லி சட்டசபை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஊழல் ஒழிப்பு கோஷத்தை முன்வைத்து 2012ல் ஆம் ஆத்மி கட்சியை துவங்கிய கெஜ்ரிவால், அடுத்த ஆண்டே ஆட்சியையும் பிடித்தார். கெஜ்ரிவால் அரசியலுக்கு வரும் முன் காந்தியவாதி அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழல் ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டார். ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்டத்தை கொண்டு வரக் கோரி 2011ல் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து சென்றது கெஜ்ரிவால்தான். அதன்மூலம் கெஜ்ரிவால் டில்லி மக்கள் மத்தியில் பிரபலமானார். போராடி பலன் இல்லை; ஆட்சி அதிகாரத்தை பிடித்து மக்களுக்கு நல்லது செய்வோம்; ஊழலை ஒழிப்போம் என முழக்கத்துடன் கெஜ்ரிவால், 2012ல் தனிக்கட்சி துவங்க முடிவெடுத்தபோது அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகு பல சமயங்களில் கெஜ்ரிவாலை ஹசாரே கடுமையாக விமர்சித்தார். மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கைதாகி சிறை சென்றபோது, ஆம்ஆத்மி கட்சிக்கு இனி வீழ்ச்சிதான் என சொன்னார். இந்நிலையில்,டில்லி தேர்தலில் பாஜ வெற்றிபெற்றுள்ள நிலையில், அதுபற்றி அன்னா ஹசாரே கூறியதாவது: நான் எப்போதும் ஒரு விஷயத்தை சொல்வதுண்டு. ஒரு வேட்பாளரின் நடத்தையும் எண்ணங்களும் சுத்தமானதாக இருக்க வேண்டும். பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது அவரது செயல்பாடுகள் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாக உணர்வும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தால்தான் வாக்காளர்களின் நம்பிக்கையை ஒரு வேட்பாளர் பெற முடியும். இதுபற்றி நான் கெஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. கடைசியில், மது விற்பனை கொள்கைக்கு தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். ஏன் அவர் மதுபான ஊழல் பிரச்னையில் சிக்கினார்? ஏன் இந்த பிரச்னை வந்தது? ஏனென்றால், பண ஆசையும் பதவி மோகமும் கெஜ்ரிவாலை ஆட்கொண்டு விட்டது என அன்னா ஹசாரே கூறினார்.