முதல்வராக பதவி ஏற்கிறார் பட்னவிஸ் BJP| Fadnavis| Shiv Sena| Maharashtra Politics| C P Radhakrishnan
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அங்கு பாஜ தலைமையில் புதிய அரசு நாளை பதவியேற்க உள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230ஐ மகாயுதி கூட்டணி வென்றது. பாஜ மட்டும் 132 இடங்களை வென்றது. முன்னதாக மும்பையில் நடந்த பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக பதவியேற்பது உறுதியானது. பட்னவிஸ், ஷிண்டே, அஜித் பவார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். கூட்டணியின் சார்பில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கான பரிந்துரை கடிதத்தை ஷிண்டே மற்றும் பவார் ஆகியோர் வழங்கினர். இதை ஏற்றுக் கொண்ட கவர்னர், பதவியேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். அதன்பின், தேவேந்திர பட்னவிஸ், ஷிண்டே, பவார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பட்னவிஸ் கூறும்போது, என்னை முதல்வராக தேர்வு செய்த மக்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பாஜ தலைமை மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நன்றி எனக்கூறினார்.