திமுகவின் பகல் கொள்ளை கட்டணம்; அண்ணாமலை | Building permit fee Charges | Annamalai | Tngovt | DMK
சத்தமில்லாமல் டபுள் ஆன கட்டட அனுமதி கட்டணம்! அண்ணாமலை கண்டனம் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி மக்களின் சொந்த வீடு கனவை தகர்த்தது திமுக அரசு. இப்போது வீட்டு வரைபட அனுமதி கட்டணத்தையும் 2 மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதி கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என திமுக வாக்குறுதி வழங்கியது. சென்னையில் 1,000 சதுர அடி இடத்துக்கு அனுமதி வழங்க 40 ஆயிரமாக இருந்த கட்டணத்தை 1 லட்சம் ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கனவே தாமதமின்றி அனுமதி பெற பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் சுயசான்று அடிப்படை என கூறி லஞ்ச ஊழலை திமுக அதிகாரப்பூர்வமாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதிக கட்டணம் செலுத்தினால் நேரில் சென்று பார்வையிடமால் உடனே அனுமதி வழங்குவோம், குறைந்த கட்டணம் செலுத்தினால் தாமதமாக்குவோம் என கூறுகிறதா திமுக அரசு? மக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், தாமதமின்றி அனுமதி வழங்குவதையே தவிர இரண்டு மடங்கு அதிக கட்டணத்தை அல்ல. உடனடியாக பகல் கொள்ளை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.