தேர்தல் நெருங்குவதால் ஆளும் ஜேஎம்ம் கலக்கம் | Jmm | Champai Soren | Hemant Soren | Jharkhand
முடிவு செய்து விட்டார் சம்பாய் புது அரசியல் ஆட்டத்துக்கு ரெடி! ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜவில் இணைய முடிவு செய்துள்ளார். அதற்கான தேதியையும் குறித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த அவர் தமது முடிவை தெரிவித்து உள்ளார். அந்த சந்திப்பின் போட்டோவை அசாம் முதல்வரும், ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். சம்பாய் சோரன், வரும் 30ம் தேதி ராஞ்சியில் நடைபெறும் விழாவில் பாஜவில் சேர உள்ளதாக ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சம்பாய் சோரன். 1990களில் ஜார்கண்ட் மாநிலம் உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர். தற்போது முதல்வர் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் சிறை சென்றபோது, சம்பாயை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு சென்றார். ஜார்கண்ட் 12வது முதல்வராக பதவியேற்ற சம்பாய்க்கு கட்சியில் அதற்கு அதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால், 6 மாதங்களில் ஹேமந்த் ஜாமினில் திரும்பி வந்தார். சம்பாயை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு மீண்டும் முதல்வர் ஆனார். இது சம்பாய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்னும் கொஞ்சகாலம் முதல்வர் பதவியில் விட்டு இருந்தால், ஜார்கண்ட் வளர்ச்சிக்கான பல நல்ல காரியங்களை செய்து முடித்திருப்பேன் என்றார். அரசியலில் இத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்த சிஎம் பதவி வெகு சீக்கிரத்தில் பறிக்கப்பட்டது சம்பாய் மனதை உறுத்தியது.