இவ்வளவு பெரிய தொகையை அரசு எப்படி கொடுக்கிறது? | Chennai High court | kallakurichi Hoock tragedy
கள்ளச்சாராய மரணங்களுக்கு எதுக்கு ₹10 லட்சம் இழப்பீடு? ஐகோர்ட் கேள்வி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது. தீ விபத்து உள்ளிட்ட விபத்துகளில் இறப்பவர்கள் குடும்பத்துக்கு அரசு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தவில்லை. அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களோ இல்லை என்பதால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அமர்வு விசாரித்தது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அதிகம். எதன் அடிப்படையில் இவ்வளவு தொகையை அரசு வழங்குகிறது என்று நீதிபதிகள் கேட்டனர். இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசு தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.