உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராமதாசுக்காக வரிந்து கட்டிய தலைவர்கள்: பழனிசாமி மவுனம் | CM Stalin | Criticizing | Ramadoss | PMK |

ராமதாசுக்காக வரிந்து கட்டிய தலைவர்கள்: பழனிசாமி மவுனம் | CM Stalin | Criticizing | Ramadoss | PMK |

பாமக நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் திடீர் அதிர்வலையை ஏற்படுத்தியது. அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ தலைவர்கள் முதல்வரின் விமர்சனத்தை கண்டித்த நிலையில், ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டார். ஆனால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் காட்டமாக பதில் அளிக்க, மாநிலம் முழுதும் முதல்வரை கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். விழுப்புரம் வழுதரெட்டியில், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழா நாளை நடக்க இருந்தது. முதல்வர் திறந்து வைக்கவிருந்தார். பாமகவுக்கும் அழைப்பு அனுப்ப திட்டமிட்டிருந்த சூழலில், இந்த விவகாரம் வெடித்ததால் அந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. முதல்வரின் விமர்சனத்தை ஆட்சேபித்து, அண்ணாமலை, தமிழிசை, வாசன், தினகரன், சீமான் என பலரும் கருத்து தெரிவித்தனர், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை தவிர. சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தனர். கரப்பான் பூச்சி போல ஊர்ந்து போய் சசிகலா காலை பிடித்து பதவி பிடித்தவர் என்று பழனிசாமியை மோசமாக விமர்சித்தனர். அதுகுறித்து ராமதாசோ, அன்புமணியோ வாய் திறக்கவில்லை; எதுவும் தெரியாததுபோல இருந்து விட்டனர். அப்படி இருக்கும்போது, ராமதாசை முதல்வர் பேசியதற்கு நாம் ஏன் எதிர்ப்பு சொல்ல வேண்டும் என பழனிசாமி பேசாமல் இருந்து விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறினார். அதோடு கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் கடைசி வரை பேச்சு நடத்திய பாமக, பிறகு பா.ஜவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கோபம் இன்னமும் பழனிசாமிக்கு இருக்கிறதாம். அவர் முதல்வராக இருந்தபோது பா.ம.க வற்புறுத்தலால் தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார். அதுவே மற்ற சமூகங்களுக்கு அதிமுக மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு தேர்தலில் தோற்க காரணமாக அமைந்துவிட்டது. இதில் எதையும் மறக்காத நிலையில், ராமதாசுக்கு ஆதரவாக எப்படி பழனிசாமி குரல் கொடுப்பார்? எனவும் அந்த மாஜி அமைச்சர் கூறினார்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி