உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜனாதிபதி முர்முவின் குறிப்பாணையை எதிர்க்க 8 மாநிலங்களுக்கு ஸ்டாலின் கடிதம்! CM Stalin | Murmu | 8 s

ஜனாதிபதி முர்முவின் குறிப்பாணையை எதிர்க்க 8 மாநிலங்களுக்கு ஸ்டாலின் கடிதம்! CM Stalin | Murmu | 8 s

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் கவர்னருக்கு எதிராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மசோதாக்கள் மீது கவர்னர்கள், ஜனாதிபதி மூன்று மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஜனாதிபதிக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியுமா? என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாநில சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவை, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்துள்ளார். இதற்கு ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நிலையில் மேற்கு வங்கம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருப்பதாவது: இந்த தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இது மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டசபைகளில் இயற்றப்படும் சட்டங்கள், கவர்னரால் தடைபடுவதைத் திறம்படத் தடுக்கும் வகையில் உள்ளது. பாஜ தலைமையிலான மத்திய அரசு முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறது. கல்வி நிறுவனங்களை அரசியல் மயமாக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இந்தச் சூழலில்தான், தமிழக அரசு கவர்னருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, மசோதாக்களைக் கையாளும்போது மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்படுகிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த கவர்னர் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலமும், மசோதாக்களை சபைக்கு திருப்பி அனுப்பாமல் இருப்பதன் மூலமும் கவர்னர் மசோதாக்களை செயலிழக்கச் செய்ய முடியாது. ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, 2து முறையாக ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது கவர்னர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. பிரிவுகள் 200 மற்றும் 201-ன் கீழ் ஜனாதிபதி மற்றும் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் கீழ் மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு உறுதி செய்யும். வெளிப்படையாக பாஜ இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கினைக் கடைபிடிக்கும் கவர்னரை எதிர்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களும் இந்தத் தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம். ஆகவே, பாஜ அரசு தனது சூழ்ச்சியின் முதல் அங்கமாக ஜனாதிபதியை சுப்ரீம்கோர்ட்டில் இது தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்விகள் கேட்டு ஜனாதிபதி அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, சுப்ரீம் கோர்ட் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்தபடி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும் என கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மே 18, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K V Ramadoss
ஜூலை 11, 2025 20:45

ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கேட்க அவருக்கு முழு அதிகாரம் உள்ளது . அவர் விளக்கம் கேட்டதை எதிர்க்க யாருக்கும் உரிமையில்லை. ஜனாதிபதியை எதிர்க்கும் முதலமைசர் மேல் உரிமை பிர ச்சினை எழுப்பலாம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ