உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை பாணியில் ஊழல் பட்டியலுடன் கவர்னரை சந்திக்க ஏற்பாடு | Actor Vijay | TVK | DMK | Corruption l

அண்ணாமலை பாணியில் ஊழல் பட்டியலுடன் கவர்னரை சந்திக்க ஏற்பாடு | Actor Vijay | TVK | DMK | Corruption l

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் எப்படியாவது வென்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் களத்தில் இறங்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடத்திய கட்சியின் முதல் மாநில மாநாடு தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநாட்டில் பேசிய விஜய், திமுக அரசை நேரடியாக விமர்சித்தார். திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு, ஒரு குடும்பமே அதிகார துஷ்பிரயோகம் செய்து கொள்ளை அடிப்பதாக குற்றம் சாட்டினார். விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் திமுகவினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சம்பாதிப்பதாகவும் ரசிகர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அவற்றில் சாம்பிளுக்கு சில புகார்கள் பற்றி, தனியார் புலனாய்வு நிறுவனம் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்தார். புகார்கள் உண்மை என தெரிந்ததும், அவற்றை துறை வாரியாக பிரித்து, தேதி வாரியாக தொகுக்க தனி டீம் உருவாக்கினார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மேடைக்கு மேடை ஊழல் புகார்களை பேசினாலும், சமூகத்தில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது ஏன் என, விஜய் தனது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். அதிமுகவினர் ஸ்டாலின் மீதும், ஓரிரு அமைச்சர்கள் மீதும் மட்டுமே குற்றம் சொல்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் மக்களின் கண் முன் நடக்கும் ஊழல், அட்ராசிட்டிகளை ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை என கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட விஜய், திமுகவின் ஊழல்களையும், அத்துமீறல்களையும் தோண்டி எடுத்து அம்பலப்படுத்துவது என தீர்மானித்தார். ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தெந்த வழிகளில் முறைகேடு செய்கின்றனர்; பினாமிகள் யார் என்ற விபரங்களை சேகரிக்க அறிவுறுத்தினார். ஆதாரம் இல்லாமல் புகார்களை அடுக்கினால், வழக்குகள் வரிசைகட்டும் என்றும் நிர்வாகிகளை அவர் எச்சரித்தார். அப்படி திரட்டப்படும் ஆதாரங்கள் அடிப்படையில், ஊழல் பட்டியல் தயாரித்து, கவர்னரை சந்தித்து அளிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். தனக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்கும் ஆளுங்கட்சிக்கு செக் வைக்க இது உதவும். மாநாட்டுக்கு பிறகான தன் முதல் அரசியல் நிகழ்வாகவும் அமையும் என்றும் விஜய் கூறியிருக்கிறார்.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை